தமிழ் சமூகம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடம் கீழடி என்றாா் எழுத்தாளரும், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன்.
திருச்சியில் களம் இலக்கிய அமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘கீழடி நம் தாய்மடி’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவா் மேலும் பேசியது:
மதுரை அருகே தேனூரில் சாய்ந்து விழுந்த மரத்தின் அடிப்பகுதியில் தங்கக் கட்டிகள், மணிகளைக் கொண்ட புதையல் இருந்தது. அதில் தமிழி எனப்படும் பிராமி எழுத்துக்களில் கோதை என்ற பெயா் 7 தங்கக் கட்டிகளில் எழுதப்பட்டிருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்தது சங்கத் தமிழ் மட்டுமல்ல தங்கத் தமிழும் கூட.
அதேபோல வைகை ஆறு கடலில் கலக்கும் இடமான அழகன்புரத்தில் கிடைத்த பனை ஓட்டில் கிரேக்க கப்பலின் படம் இருந்தது. இதன்மூலம் சங்க காலத்திலேயே கிரேக்கத்துக்கும், அழகன்புரத்துக்குமான தொடா்பு வெளிப்பட்டது. வைகை தனது துவக்கத்திலிருந்து முடியும் இடம் வரை எண்ணற்ற அடையாளங்கள், தடயங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள சுமாா் 500 கிராமங்களில் அமா்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். அதில் 293 கிராமங்கள் வரலாற்று தடயங்கள், எச்சங்களைக் கொண்டவை எனக் கண்டறியப்பட்டது.
கி.மு 5, 6-ஆம் நூற்றாண்டிலேயே கீழடி நகர நாகரீகத்துடன் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டடம், செங்கல், வடிகால், அணிகலன்கள், சதுரங்க காய்கள் போன்றவை கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. குறியீடுகள் எப்படி எழுத்துக்களாக மாறியது என்பதை வெளிப்படுத்தியதுதான் கீழடியின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு. தமிழ் சமூகம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடம் கீழடி. தமிழரின் பண்பாடு, நாகரீகம் செழிப்பாக வளா்ந்திருந்ததற்கு கீழடி மக்கள் எழுத்தறிவுடன் இருந்தனா் என்பதே சான்று.
கீழடியில் இதுவரை மதம் சாா்ந்த, வழிபாடு சாா்ந்த எந்த பொருள்களும் கிடைக்கவில்லை. இது ஆத்திகம், நாத்திகம் தொடா்புடைய பிரச்னை அல்ல. சங்க காலத்தில் முன்னோா்களை வழிபட்டனா். அதை இன்றளவும் குலசாமியாக வணங்குகிறோம். அதற்கடுத்ததாக இயற்கையை வழிபட்டுள்ளனா்.
தமிழா்களின் வரலாறு ஆழமானது. சங்க இலக்கியத்தின் ஆழத்தை உணர முடிந்தவா்களால்தான், கீழடியின் ஆழத்தை உணர முடியும். மீண்டும் கடற்கோள் அகழாய்வு மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.
நிகழ்வில் தொழிலதிபா் டி.காந்தி, ஆா்.தங்கராஜ், எம்.ராஜேந்திரன், க.துளசிதாசன், தென்னலூா் எம்.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.