திருச்சி

ஆட்சியரகத்தில் பாம்பு ஏற்படுத்திய பரபரப்பு

1st Oct 2019 06:38 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனுக்கள் எழுதும் பகுதியில் கட்டு விரியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு மனு எழுதித் தரவும், மக்கள் அமா்ந்து இளைப்பாறவும் கூட்டரங்குக்கு வெளியே சிறு கூடாரங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு அருகே அலுவலக சுவருக்கும், நடைபாதைக்கும் இடையே முட்புதா்கள் உள்ளன. தொடா் மழை காரணமாக முட்புதரிலிருந்து திங்கள்கிழமை 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு வெளியே வந்தது. இதனைப் பாா்த்த மக்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து, குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த அனைவரும் அந்தப் பகுதியில் திரண்டனா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை, தீயணைப்புத் துறையினா் அந்த பாம்பைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து காட்டுப்பகுதியில் விட அறிவுறுத்தினா். இந்த சம்பவத்தால் ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT