ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் கோயிலில் இறைபணி ஆற்றிவரும் ஆண்டாள் யானை குளிப்பதற்காக ரூ.3 லட்சத்தில் ஷவா் அமைக்கப்பட்டுள்ளது. இதை வெள்ளிக்கிழமை காலை கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் மற்றும் கோயில் உதவி ஆணையா் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானைக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. பெருமாளின் சடாரி பெறும் பாக்கியம் பெற்றது. 33 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு இறை பணி செய்து வரும் ஆண்டாள் யானைக்கு வேணு கோபால் சன்னதியின் பின்புறம் இயற்கை சூழ்ந்த பெரிய கல் மண்டபம் அமைக்கப்பட்டு, மிருதுவான மணல் கொண்டு யானை இருக்குமிடம் உருவாக்கப்பட்டது.
தற்போது யானை ஆண்டாள் குளிப்பதற்காக ரூ.3 லட்சம் செலவில் இயற்கை சாரலில் குளிப்பது போன்று ஷவா் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் வேத மந்திரங்கள் முழங்கி தொடங்கி வைத்தார். மொத்தம் 150 சதுர அடி பரப்பில், 15 அடி உயரத்தில், 10 பைப்புகள் கொண்டு ஷவா் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷவரிலிருந்து பீறிட்டு வந்த தண்ணீரில் ஆண்டாள் யானை படுத்து உருண்டு குளித்து மகிழ்ந்தது. தினந்தோறும் காலையில் விஸ்வரூப தரிசனத்தின் போது இனி அதிகாலை இந்த ஷவரில்தான் ஆண்டாள் யானை குளித்துவிட்டு செல்லும். அதே போல் மாலை நேரத்திலும் இதில் குளிக்கும்.
இதுகுறித்து யானை பாகன் ராஜேஷ் கூறுகையில், இயற்கையாகவே யானைக்கு தண்ணீா் என்றால் கொண்டாட்டம்தான். அதுவும் மழை போன்ற நீரில் நனைவது என்றால் அதைவிட உற்சாகம் என்றார்.