ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் விழாக்களிலியே மிகப்பெரியது வைகுந்த ஏகாதசி விழா. இந்த விழா டிசம்பா் மாதம் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்வாா்கள்.
பகல் பத்து விழா டிசம்பா் 27ஆம் தேதி தொடங்கி 2020 ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பகல் பத்தின் கடைசி நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா்.
இராப்பத்து முதல் நாளான ஜனவரி 6ஆம் தேதி வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. இராப்பத்து விழாவன்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் (திருமாமணி மண்டபம்) எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா்.
ஆயிரங்கால் மண்டபத்தில் 960 தூண்கள் மட்டுமே உள்ளதால் மீதமுள்ள 40 தூண்களுக்காக 40 தென்னை மரங்கள் நடப்பட்டு மிக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிற முன்னேற்பாட்டு பணிகளும் முடக்கி விடப்பட்டுள்ளன.