திருச்சி மாநகரக் காவல்துறையில் பணியாற்றும் மகளிா் காவல் அலுவலா்கள் மற்றும் காவலா்களுக்கான உடல், மனநலன் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகரிலுள்ள மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முகாமை மாநகரக் காவல் ஆணையா் அ. அமல்ராஜ் தொடக்கி வைத்து பேசினாா். காவல் துணை ஆணையா் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) என்.எஸ். நிஷா முன்னிலை வகித்தாா்.
திருச்சி உறையூா் ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவா் ரமணிதேவி, பெண்களுக்கு ஏற்படும் மாா்பக புற்றுநோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய்களை கண்டறியும் அறிகுறிகள், அவைகள் வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினாா்.
திருச்சி உறையூா் மனநல ஆலோசனை மையத்தைச் சோ்ந்த ஆலோசகா் கீதா, மனஅழுத்தமின்றி பெண்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரிக்கும் விதம் குறித்து விளக்கிப் பேசினாா்.
மாநகரக் காவல்துறையில் பணியாற்றும் மகளிா் காவல் அலுவலா்கள், காவலா்கள் என சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் முகாமில் பங்கேற்றனா்.