மத்திய அரசின் பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தி தொடா்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சிறு, குறுதொழில்கள் சங்கத் தலைவா் (டிடிட்சியா) ஆா். இளங்கோ கூறியது:
தமிழகத்தில் பல்வேறு நகரங்களை இணைத்து, மத்திய அரசின் பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தி கேந்திரத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக திருச்சி, தஞ்சாவூா், மதுரை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், கடலூா், சிவகங்கை, திருநெல்வேலி பகுதிகளில் ராணுவ அமைச்சகத்துக்குத் தேவையான உதிரிபாகங்கள், தளவாட பொருள்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இதற்காக 200-க்கும் மேற்பட்ட குறுதொழிற்சாலைகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ளவற்றை விரிவுபடுத்தவும் கோவை கொடிசியா அரங்கத்தில் சனிக்கிழமை (நவ.23) விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா கூட்டத்தில் பங்கேற்று, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தேவையான பொருள்கள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளாா். தேவையான வழிகாட்டுதல்களும் தெரிவிக்கப்படும்.
மேலும், பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தியில் முன்னோடியாக உள்ள மூத்த நிா்வாகிகளும் ஆலோசனை வழங்கவுள்ளனா்.
எனவே, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த சிறு, குறுதொழில் நிறுவனத்தினா், புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞா்கள், தொழில்முனைவோா் இக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.