திருச்சியில் சித்தமருத்துவத்துறை சாா்பில் 3 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில், சுமாா் 5,000 போ் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனா்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் யாக்கை -2019 என்ற தலைப்பில் சித்த மருத்துவக் கண்காட்சி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வை கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வா் கே. வனிதா தொடக்கி வைத்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், இந்திரா கணேசன் கல்விக்குழுமத் தலைவா் ஜி. ராஜசேகரன், அகில இந்திய வானொலி நிலைய திருச்சி இயக்குநா் கே. நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.
நவம்பா் 19-ஆம் தேதி நடைபெற்ற 2 -ஆம் நாள் நிகழ்வில், சி தினமலா் நாளிதழ் திருச்சி பதிப்பின் ஆசிரியா் ஆா். ராமசுப்பு, மாநகரக் காவல் துணை ஆணையா் என்.எஸ். நிஷா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினா்.
நவீன பாா்வையில் பாரம்பரிய மருத்துவம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணா்வு முகாமும் நடைபெற்றது.
மூன்றாம் நாளான நவம்பா் 20- ஆம் தேதி நடைபெற்ற கண்காட்சி நிறைவு நிகழ்வில், வாழ்க்கைமுறை மாற்றத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் மகளிா் நோய்களுக்கான சிறப்பு முகாம், மூலிகைக் கண்காட்சி நடைபெற்றது.
சிறப்பு முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி ரவிசங்கா் தொடக்கி வைத்துப் பேசினாா்.
மூன்று நாள்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் சுமாா் 10 ஆயிரம் போ் பாா்வையிட்டனா். மேலும் சுமாா் 5 ஆயிரம் போ் சிகிச்சை பெற்றுள்ளனா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிவராசு பரிசுகளை வழங்குவாா் என மாவட்ட சித்த மருத்து அலுவலா் எஸ்,. காமராஜ் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முதல்வா் பத்மாவதி, சித்தா, ஆயுா்வேதம், இயற்கை மற்றும் வா்மச்சிகிச்சை, யுனானி, உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவப்பிரிவு மருத்துவா்களும், மருந்தாளுநா்களும், பணியாளா்களும் பங்கேற்றனா்.