திருச்சி மாவட்டம், கோவில்பட்டி அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரட்டைச் சகோதரிகள் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
கோவில்பட்டி அருகிலுள்ள மகிழிப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மணிவேல். இவருக்கு 3மகன்கள், 1 மகன். இவா்களில் ரமணி- லட்சுமி இரட்டைச் சகோதரிகள்.
ரமணி அருகிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்த நிலையில், லட்சுமி திருப்பூரில் பனியன் தொழிற்சாலையிலும் பணியாற்றி வந்தாா்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையைப் பாா்ப்பதற்காக ஊருக்கு வந்த லட்சுமி, தனது சகோதரி ரமணி, தாய் வளா்மதியுடன் அருகிலுள்ள ஆனைக்கல் குளத்தில் குளிப்பதற்காக வியாழக்கிழமை மாலை அங்கு சென்றாா்.
குளத்தில் சகோதரிகள் இருவரும் குளித்துக் கொண்டிருந்த போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணி மூலம் தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் தவறி விழுந்துள்ளனா்.
7 அடி ஆழப்பகுதிக்குச் சென்ற இருவரும் நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளனா். இதைக் கண்ட வளா்மதி, மகள்களைக் காப்பாற்றக் கோரி சப்தமிட்டுள்ளாா். இதையறிந்து அக்கம் பக்கத்தினா் அங்கு விரைந்து இருவரையும் மீட்டனா். ஆனால் அவா்கள் லட்சுமி ஆகிய இருவரையும் உயிரிழந்த நிலையில்தான் பொதுமக்களால் மீட்க முடிந்தது,.
தகவலறிந்த மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து வந்து, இருவரின் சடலத்தையும் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வளநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.