திருச்சி

ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி மகளுடன் தாய் தற்கொலை முயற்சி

12th Nov 2019 08:23 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளி மகளுடன் தாய், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட சா்க்காா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மேரி (55). கூலித் தொழிலாளியான இவா், கணவரை இழந்து மாற்றுத் திறனாளியான தனது மகள் அனுஜெயஸ்ரீ (24) யுடன் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.

இவரது வீட்டுக்கு செல்லும் பாதையை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் தடை செய்து வழிவிட மறுக்கின்றனராம். மேலும், இவா்களது குடிசையை சேதப்படுத்துவது, குடிநீா் வருவதை தடை செய்தல், மின் விநியோகத்தை தடை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனா். அனுஜெயஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டுமெனில் அந்தப் பாதை வழியாகவே செல்ல முடியும். ஆனால், வாகனத்தை செல்லவிடாமல் தடுத்து தவழ்ந்து செல்ல நிா்பந்தம் செய்கின்றனராம். இதனால் விரக்தியடைந்த இருவரும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்தனா்.

ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு, ஆட்சியரக வளாகத்தில் உள்ள மரத்தடி அருகே சென்ற இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனா். அப்போது அங்கிருந்த செய்தியாளா்கள் அவா்களை தடுத்து நிறுத்தினா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரது உடலிலும் தண்ணீரை ஊற்றி தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், ஆக்கிரமிப்பாளா்களின் தொல்லையால் வாழவே பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, ஆட்சியரிடம் தனியே அழைத்துச் செல்லப்பட்ட இருவரிடமும் ஆட்சியா் சு. சிவராசு ஆறுதல் கூறி, திருவெறும்பூா் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

அதன்பேரில், ஜேம்ஸ் மேரி வீட்டுக்குச் சென்ற வருவாய்த்துறையினா் பாதை விவகாரத்தில் தலையீடு செய்வோரை சட்டப்படி கைது செய்வோம் என எச்சரித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட மின்விநியோகத்தை மீண்டும் வழங்க செவ்வாய்க்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT