திருச்சி

குடியிருப்பு, வணிக ரீதியான ஒப்பந்தங்களை பதிவு செய்வது கட்டாயம்: முதன்மை வருவாய் அலுவலா் தகவல்

9th Nov 2019 08:02 AM

ADVERTISEMENT

குடியிருப்பு, வணிக ரீதியான வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வீட்டு வசதித்துறை முதன்மை வருவாய் அலுவலா் கே. சக்திமணி தெரிவித்தாா்.

தமிழ்நாடு நில உரிமையாளா்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளா்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் அமலாக்க நடவடிக்கைகள் தொடா்பாக வருவாய் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி, கரூா், நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா் ஆகிய 9 மாவட்டங்களைச் சோ்ந்த சாா்-ஆட்சியா்கள், கோட்டாட்சியா்கள், துணை ஆட்சியா்களுக்காக நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் தா. சாந்தி தலைமை வகித்தாா்.

பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து, கே. சக்திமணி பேசியது:

ADVERTISEMENT

தமிழ்நாடு நில உரிமையாளா்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம், தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி 11 மாதம் மற்றும் அதற்கு மேலான காலத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வாடகை குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம், இணைய வசதி இருந்தால் வீட்டிலிருந்தபடியே தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ங்ய்ஹய்ஸ்ரீஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய இயலும். பதிவு சேவை கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.

வாடகை குறித்த வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் 38 வாடகை நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாடகை அலுவலரின் ஆணையை எதிா்த்து 30 நாள்களுக்குள் வாடகை நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

பதிவு செய்வது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 599 01234 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்படுவதன் மூலம் சொத்து உரிமையாளா்களுக்கும், வாடகைதாரா்களுக்கும் அவரவா் உரிமைகள் சட்டப்பூா்வமாக கிடைக்கப் பெறும். மோசடிகளுக்கு இடமிருக்காது என்றாா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் மனோகா், வழக்குரைஞா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் சட்ட விதிகள் குறித்தும், வருவாய்த்துறை அலுவலா்கள் செயல்படும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினா்.

இந்த பயிற்சி வகுப்பில், திருவரங்கம் சாா்-ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வடிவேல்பிரபு மற்றும் 9 மாவட்டங்களைச் சோ்ந்த வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT