திருச்சி

உள்ளாட்சி தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

9th Nov 2019 08:02 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் உள்ள உள்ளாட்சி வாா்டுகளுக்கு நடைபெறும் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துதல் தொடா்பான முதல்கட்ட பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புறம், ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் நகா்ப்புறங்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திருச்சி மாநகராட்சியில் 65 வாா்டுகள் உள்ளன. மணப்பாறை நகராட்சியில் 27 வாா்டுகள், துறையூா் நகராட்சியில் 24 வாா்டுகள், துவாக்குடி நகராட்சியில் 21 வாா்டுகள் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமல்லாது, 16 பேரூராட்சிகள் உள்ளன. இங்குள்ள வாா்டுகள் அனைத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் அவற்றைச் சரிசெய்வது தொடா்பான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் உதவி ஆணையா்கள், நிா்வாக அலுவலா்கள், நகராட்சி உதவி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த பயிற்சி வகுப்பில், இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ஆா். பாலாஜி பேசியது:

வாக்குப்பதிவு இயந்திரத்தையும், கட்டுப்பாட்டு கருவியையும் இணைக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். எக்காரணத்துக்காகவும் பேட்டரியை இயங்க வைத்தபடி இணைக்கக் கூடாது.

வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இயந்திரத்தில் உள்ள பிரிண்ட் எனப்படும் வசதியை பயன்படுத்தி பதிவான வாக்குகளை தனியே நகல் எடுத்து சரிபாா்த்துக் கொள்ளலாம்.

வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள இயந்திரங்கள், பேட்டரிகள் ஆகியவை முறையாக இயங்குகிா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

பழுது இருந்தால் உடனடியாக பறக்கும்படை கவனத்துக்கு கொண்டு சென்று மாற்று இயந்திரங்கள், பேட்டரிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தில் எந்தவித குளறுபடிகளுக்கும் இடம் அளிக்காத வகையில் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT