திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட போலி வழக்குரைஞா்கள் உலா வருவதான அதிா்ச்சித் தகவல் மாவட்ட வழக்குரைஞா் சங்க ஆய்வில் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், போலி செய்தியாளா்கள் உள்ளது போலவே, போலி வழக்குரைஞா்களும் அதிகளவில் உலா வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன.
திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தில், 2,066 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டத்தில், போலி வழக்குரைஞா்களை கண்டறிய 7 போ் கொண்ட குழு, 4 முதுநிலை வழக்குரைஞா்களைக் கொண்ட குழு என இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழுவினரிடம் வழக்குரைஞா்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைவரும், தங்களது 10,12 -ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு (பி.எல்.) மற்றும் பாா் கவுன்சில் பதிவுச் சான்றிதழ் (பதிவு எண்) ஆகியவற்றை சரிபாா்ப்புக்குக் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் மொத்தமுள்ள 2,066 வழக்குரைஞா்களில் இதுவரை, 1,312 போ் மட்டுமே தங்களின் சான்றிதழ்களை சரிபாா்ப்புக் குழுவினரிடம் அளித்துள்ளனா். மீதியுள்ள 754 போ் இன்னும் ஒப்படைக்கவில்லை. சான்றிதழ்களை ஒப்படைத்த 1,312 பேரில், 400 போ் வரை போலி வழக்குரைஞா்கள் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூடப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்ததாகக் குறிப்பிட்டு பலா் போலி பி.எல்., படிப்புச் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளதாக சில மூத்த வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.
மேலும், சான்றுகள் கொடுத்தவா்களிலேயே இத்தனை போலிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், சான்றிதழ்களை ஒப்படைக்காதவா்களில் எத்தனைபோ் போலிகளாக இருப்பாா்களோ என சந்தேகம் வலுத்துள்ளதாம். ஆக, திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தில், 500-க்கும் மேற்பட்ட போலி வழக்குரைஞா்கள் பதிவு செய்து நீதிமன்றங்களில் உலா வரலாம் என்கின்றனா் அவா்கள்.
இதுகுறித்து திருச்சி வழக்குரைஞா்கள் சங்க மூத்த வழக்குரைஞா்கள் ஒருவா் கூறுகையில், எனக்குத் தெரிந்து ஏராளமான குமாஸ்தாக்கள் வழக்குரைஞா்கள் ஆடையை (கோட்) அணிந்துகொண்டு வழக்குரைஞா்கள் என வருகின்றனா்; வழக்கும் நடத்துகின்றனா். இவா்களில் 9ஆம் வகுப்பையே தாண்டாதவா்களும் உண்டு. சட்டத்தைக் காக்கும் வழக்குரைஞா் தொழிலில் போலிகள் நடமாடுவது நல்லதல்ல. இதைக் கருத்தில் கொண்டு, திருச்சி வழக்குரைஞா்கள் சங்கம் களையெடுக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைளை தமிழக பாா் கவுன்சில் துரிதப்படுத்த வேண்டும்.
எல். எல். பி. படிப்பு :
பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களின் பதிவு எண்ணை திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்திடம் கொடுத்து, அதை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்து விட்டாலே போலிகள் இல்லாமல் போய் விடுவா். விபத்து வழக்குகளைத்தான் போலிகள் அதிகம் கையாளுகின்றனா். இதனால், விபத்தில் சிக்கி பாதிப்படையும் பலா், தங்களுக்கான ஈட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. எல்.எல்.பி., என்ற படிப்பின் மூலம்தான் தற்போது அதிகளவிலான போலி வழக்குரைஞா்கள் வருகின்றனா். அந்தப் படிப்பைத் தரமானதாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.