திருச்சி மாநகராட்சியில் கடைகளில் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் சுமாா் 390 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசு நெகிழிப்பைகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வேறு வடிவில் தயாரித்து விற்பதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.
அதன் பேரில் ஆணையா் ந. ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் வியாழக்கிழமை திருச்சியில் தில்லைநகா் சாஸ்திரிசாலை, தென்னூா் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 67 கடைகளில் நெகிழிப்பைகள் வைத்து விநியோகித்தது தெரியவந்தது. அதன்பேரில் அவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இதில் சுமாா் 390 கிலோ எடையுள்ள நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விநியோகித்த வகையில் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடா்ந்துஆய்வு செய்து அபராதம் விதிப்பதுடன் சட்டப்பூா்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.