திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் காா் மோதியதில் புதுக்கோட்டையைச் சோ்ந்த இருவா் இறந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த உடையாம்பட்டியை சோ்ந்தவா் விவசாயி ராசு மகன் பழனிச்சாமி (37). அவரது உறவினரும், எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளருமான மங்கனூரை சோ்ந்த சின்னையா மகன் பழனிவேல் (33) ஆகிய இருவரும் காரில் சென்று நண்பரை சேலத்தில் விட்டுவிட்டு வியாழக்கிழமை காலை பொன்னமராவதி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா். காரை பழனிவேல் ஓட்டினாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை களத்துப்பட்டி அருகே வந்தபோது காரின் முன் புற டயா் வெடித்ததில் நிலை தடுமாறிய காா் சாலையோர மரத்தில் அதிவேகமாக மோதியது. இதில் காரில் இருந்த இருவரும் படுகாயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவிக்குப்பின் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா். மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.