"விடாமுயற்சியும், பயிற்சியும் இருந்தால் விளையாட்டில் சாதிக்கலாம்'

விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் என ஆசிய தடகளப்  போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்தார்.

விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் என ஆசிய தடகளப்  போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்தார்.
திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் கோமதி மாரிமுத்துவுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் எஸ். சோலைரத்தினம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் எம். எட்வின் முன்னிலை வகித்தார். 
விழாவுக்கான திட்டத் தலைவரும், சங்க முன்னாள் தலைவருமான என். மோகன், விளையாட்டு வீரர்களுக்கு ரோட்டரி சங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
விருதை பெற்று  வீராங்கனை கோமதி மாரிமுத்து பேசியது:   விடா முயற்சியும், பயிற்சியும் இருந்தால் விளையாட்டில் சாதிக்க முடியும். பயிற்சியை இடையில் நிறுத்தினேன். தந்தை மற்றும் பயிற்சியாளரின் மறைவு என அடுத்தடுத்து குறுக்கீடுகள் வந்தன.
இருப்பினும் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் விடா முயற்சியுடன், கிடைத்த மைதானங்களை எல்லாம் பயிற்சிக்கு பயன்படுத்தி சாதித்து காட்டியுள்ளேன்.  என்னைப்போன்று வறுமையில் உள்ள விளையாட்டு வீரர்களை பொதுநல அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
விழாவில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் பி. சுப்பிரமணியன் பேசியது:
ஆசிய தடகளப் போட்டியில் முதன்முறையில் பங்கேற்ற கோமதி மாரிமுத்து, தலைசிறந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனை போல ஓடினார். 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் சுற்றுகளை நிதானமாக கடந்து, இறுதியில் 15 மீட்டர் தொலைவை மட்டுமே தனது இலக்காகக் கொண்டு, வேகமெடுத்து உடன் வந்தவர்களைக் கடந்து முதலிடத்தை பிடித்தார். இதோடு நின்றுவிடக் கூடாது. அடுத்து வரும்  சர்வதேச விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மத்திய அரசின் அர்ஜூனா விருதை பெற வேண்டும்.
சர்வதேச தடகள வீரர் என். அண்ணாவி பேசியது:
ஆசிய போட்டியில் தங்கம் வென்றதோடு நின்றுவிடாமல், தொடர்ந்து பயிற்சி எடுத்து அடுத்தடுத்து வரும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்ல வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
கே. மீனா பேசியது:
பெண்கள் சாதிக்க வேண்டுமென்றாலே பல தடைகளை கடந்து வர வேண்டிய சூழல் உள்ளது. வறுமை நிலையில், ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தாய், தந்தையின் ஊக்குவிப்பால் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் கோமதி மாரிமுத்து. பெண் குழந்தைகள் பெற்றால் தங்கமங்கையை பெற்றோம் என்று ஒவ்வொரு பெற்றோரும் கொண்டாட வேண்டும் என்ற செய்தியை சமூகத்துக்கு தனது வெற்றி மூலம் எடுத்துக் கூறியுள்ளார். 
தடகளப் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கோமதி மாரிமுத்துவை முன்மாதிரியாகக் கொண்டு, பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில், கோமதி மாரிமுத்துவுக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
வழக்குரைஞர்கள் சார்பில் பரிசு:  திருச்சி குற்றவியல் மற்றும் பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், கோமதி மாரிமுத்துவுக்கு தங்க மோதிரம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவுக்கு பெண் வழக்குரைஞர் சங்கச் செயலர் ஜெயந்திராணி தலைமை வகித்தார். வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் வெங்கட்பிரபு, செல்லம் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com