திருச்சியில் தினமணி கல்விக் கண்காட்சி தொடக்கம்: அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவ, மாணவிகள்

தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இணைந்து நடத்தும் 12ஆவது கல்விக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.


தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இணைந்து நடத்தும் 12ஆவது கல்விக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 படிப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார். சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் கல்விக் குழுமப் பேராசிரியர் வி.வேலுச்சாமி,  திருச்சி தினமணி பதிப்பின் உதவிப் பொது மேலாளர் ஜெ.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கண்காட்சியை, தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.உமா, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக புல முதன்மையர்  வி.பத்ரிநாத்,  பாவேந்தர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் வி.எஸ்.பிரசன்னா பிரியதர்ஷினி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
விழாவில், எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் விளம்பரப் பிரிவு துணைப் பொதுமேலாளர் ஆர்.சத்யநாராயணன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம், சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் கல்விக் குழுமம், பாவேந்தர் பாரதிதாசன் கல்வி நிறுவனம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பதிப்புத்துறை வெளியீடுகள்,  தினமணியின் தேர்தல் மலர், மாணவர் மலர் போன்ற வெளியீடுகள் விற்பனை மையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன.  நீண்ட வரிசையில் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர். 
கண்காட்சி தொடக்க விழாவில் திருச்சி தினமணி பதிப்பும், ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையமும் இணைந்து அண்மையில் நடத்திய ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ்களை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வழங்கினார். 
இதனைத் தொடர்ந்து, மதிப்பெண்களைத் தாண்டி ஓர் உலகம் என்ற தலைப்பில் கல்வியாளர் டி.நெடுஞ்செழியன், நீட் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் சீக்கர்ஸ் பயிற்சி நிறுவன விற்பனைப்பிரிவு மேலாளர் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் பேசினர்.
கண்காட்சியைப் பார்வையிட்ட அனைத்து பார்வையாளர்களுக்கும் கல்லூரி சேர்க்கைக்கான ஆலோசனைகளும்,
 நிபுணர்கள் பலரது தொழில்துறை வழிகாட்டுதல்களும், கல்லூரிகளில் உள்ள பாடங்கள் பற்றிய விளக்கங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி ஆண்டவர் மினரல்ஸ் நிறுவனத்தினர் குடிநீர் வசதியும், திருச்சி ஆப்பில் மில்லட் நிறுவனத்தினர் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். 
கண்காட்சியில் இன்று...
கல்விக் கண்காட்சியில் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்  இரவு 7 மணி வரை கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும், என்வேலை என் தேர்வு என்ற தலைப்பில் பெரு நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி மோகன்வேல் ஜெயச்சந்திரன் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும். மேலும் விபரங்களுக்கு 95009 69407,98943 04081என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com