திருச்சியில் மகளிர் தொழில்முனைவோர் சங்கம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை சார்பில், இளையோருக்கான தொழில்வாய்ப்புகள், அரசுத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு, 13 ஆம் ஆண்டு மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் க. கோபிநாத் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார். திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் க. அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிர் தொழில்முனைவோர்களுக்கு சான்றுகள், பரிசுகளை வழங்கிப் பேசினார்.
தொழில் முனைவோராக நினைக்கும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில்,பல்வேறு சுயதொழில்கள் தொடங்குதல், அதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுத்திட்டங்கள், வங்கிகள் நிதியுதவி, மூலப்பொருள்கள்,சந்தை வாய்ப்புகள், இ-மார்க்கெட்டிங், திறன் பயிற்சிகள், தொழில் தொடங்க வழிகாட்டுதல், மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டன.
மாவட்டத் தொழில் மையம், இந்திய உணவு பதனத் தொழில்நுட்பக் கழகம், நபார்டு, இந்திய வேளாண் அறிவியல் மையம் தாட்கோ, சிட்கோ, பல்வேறு வங்கிகளின் திறன் மேம்பாட்டு மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொழில் சங்கங்கள், மண்டல மகளிர்தொழில் பயிற்சி மையங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். சனிக்கிழமையும் கருத்தரங்கு நடைபெறுகிறது.
தொடக்க விழாவில், ஜமால் முகமது கல்லூரி முதல்வர் எஸ். இஸ்மாயில் மொய்தீன், பொருளாளர் ஜமால் முகமது சாஹிப், செயலர் ஏ.கே. காஜா நஜ்முதீன், துணைச் செயலர் கே. அப்துஸ் சமது, டிடிட்சியா தலைவர் ஆர். கனகசபாபதி, தேசிய சிறுதொழில் கழக திருச்சி கிளை மேலாளர் நா. கார்த்திகேயன், பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் ந.மணிமேகலை, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் செயலர் மோ.மல்லிகா, மாவட்டத் தலைவர் கயல்விழி, மாநிலத் தலைவர் ஆர். ராஜமகேசுவரி, மாவட்டச் செயலர் பொன். செல்வி, திட்ட அலுவலர் சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.