திருச்சி

மருங்காபுரியில் மணல் கடத்தல்தொடர்வதாக புகார்

31st Jul 2019 09:52 AM

ADVERTISEMENT

மருங்காபுரி வழியாக இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக, மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இறவை பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் எம். அப்துல்லா செவ்வாய்க்கிழமை அளித்த புகார் மனு:
 மருங்காபுரி வட்டத்துக்குள்பட்ட தில்லாம்பட்டி, வி. இடையப்பட்டி, மினிக்கியூர், தோனியாறு, வேம்பனூர் பகுதிகளில் ஆற்றுப் படுகைகளிலும், வாய்க்கால்களிலும் சேகமராகியுள்ள மணலை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் திருடி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 
செங்கல், சிமென்ட் லோடு கொண்டு செல்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. புத்தாநத்தம், எளமணம் வழியாகவும், துவரங்குறிச்சி, பழைய பாளையம் வழியாகவும், துவரங்குறிச்சி, காரைப்பட்டி, செந்துறை வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் மணல் கடத்தப்படுகிறது.
இதேபோல, விராலிமலை-கீரனூர் சாலையில் பூமரத்து ஆத்துப்பட்டி, காக்காக்குடி பகுதிகளில் இருந்தும் மணல் கடத்தல் நடைபெறுகிறது என மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், வருவாய்த்துறை மூலம் சோதனை நடத்த உத்தரவிடுவதகாவும், மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT