திருச்சி

நெ.1 டோல்கேட்- அரியலூர் இடையே 4 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்

31st Jul 2019 09:52 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம்,  நெ.1 டோல்கேட் முதல் அரியலூர் வரையிலான சாலையை  நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி நெ. 1. டோல்கேட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் தெற்கு, வடக்கு மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார்.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்  தலைவர் கே.எம். காதர் மொய்தீன் சிறப்புரையாற்றினார். தெற்கு மாவட்டத் தலைவர் நிஜாம், மாவட்டச் செயலர் ஹபிபுர் ரஹ்மான்,வடக்கு மாவட்டச் செயலர் முகமது நிஜாம் மற்றும் கட்சியின் மகளிரணி, இளைஞரணி, தொழிற்சங்கம், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் உள்ளாட்சித்  தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் கணிசமான வார்டுகளில் போட்டியிடும் வகையில்,திமுக தலைமையிடம் பேசி இடங்களை பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்.
குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற முடியாமல் முடங்கியுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கு விரைந்து தேர்தல் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்திடம் ஒற்றுமையை மேம்படுத்த மஹல்லா ஜமாஅத்துகளை வலுப்படுத்த வேண்டும். முடிவடையாமல் உள்ள திருச்சி  ஜங்ஷன் மேம்பாலப்  பணிகளை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லால்குடியை அடுத்து பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாலும், வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் திருச்சி நெ.1 டோல்கேட்-லால்குடி வழியிலான அரியலூர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT