மணப்பாறையில், மறைந்த மருத்துவர் வி.என்.லெட்சுமிநாராயணன் நினைவாக அருள்மிகு மாதுளாம்பிகை உடனாய நாகநாதசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் அருட்செல்வர் அருணகிரிநாதர் இசை விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு 22-ஆம் ஆண்டு இசை விழா வெள்ளிக்கிழமை இரவு ஆலய வளாகத்தில் தொடங்கியது.
முதல் நாள் விழாவாக இறைத்தமிழ் விழாவில் சந்தத்தமிழ் தந்த தங்கக் கவிச்சித்தர் தெய்வத்திரு அருட்செல்வர் அருணகிரிநாதர் தெய்வத்திருசிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேடய வாகனத்தில் எழுந்தருளி சிவாலய உட்சுற்று வைபவம் நடைபெற்றது. மங்கல இசையுடன், பஞ்ச வாத்தியங்களுடன் அருணகிரிநாதர் ஆலய வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இயற்றமிழ் விழாவில் வழக்காடு மன்றமும், ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் நாள் நிகழ்வாக இசை, நாட்டியத்தமிழ் விழாவில் புதுக்கோட்டை அனுராதா சீனிவாசனின் பரதநாட்டிய கலைவிழா நடைபெறுகிறது.