திருச்சி

மக்காச்சோள பயிர் பாதிப்புக்கு ரூ.8.96 கோடி இழப்பீடு: ஆட்சியர் தகவல்

27th Jul 2019 09:18 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 16,182 விவசாயிகளுக்கு ரூ.8.96 கோடி மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சு. சிவராசு கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதல் காரணமாக விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி இழப்பீடு வழங்குவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். 
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 147 கிராமங்களில் பாதிக்கப்பட்ட 16,182 விவசாயிகளுக்கு ரூ.8.96 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது. இந்த தொகையில் இதுவரை ரூ.1 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டுக்கு பயிர்க் காப்பீடு செய்த 20,789 விவசாயிகளுக்கு ரூ.46.07 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இதுவரை 18,229 விவசாயிகளுக்கு ரூ.43.12 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள 2,560 விவசாயிகளுக்கு ரூ. 3.58 கோடி பெறப்பட்டு அடுத்த 10 நாள்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.  2019-20ஆம் ஆண்டுக்கு காரீப் பருவத்துக்கு காப்பீடு செய்ய அரசாணை பெறப்பட்டுள்ளது. இதன்படி, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.650 பிரிமீயம் செலுத்த வேண்டும். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாகும். துவரைக்கு ரூ.315, நிலக்கடலைக்கு ரூ.520-ஐ செப்.30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ரூ.1,365-ஐ ஆதஸ்ட் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். சோளத்துக்கு ரூ.206, கம்புக்கு ரூ.182-ஐ செப்.30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
விவசாயிகள் கோரிக்கை: தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி, குளம், வரத்துக் கால்வாய், பாசனக் கால்வாய்களை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் சம்பா பயிருக்கு உரிய காலத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். காவிரியில் தொடர்ந்து நடைபெறும் மணல் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT