கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவகத்தை பிகார் படைப்பிரிவு ராணுவ உயர்அதிகாரி பிரிகேடியர் நடராஜன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றிதினவிழா வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. போரின்போது எதிரிகளின் முகாமிற்குள் நுழைந்து 4 பேரை சுட்டுவீழ்த்தி ஏவுகணையால் எதிரிகள் முகாமை அழித்து வீரமரணமடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனுக்கு நினைவகம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ரூ.8.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அந்த நினைவிடத்தை, பிரிகேடியர் நடராஜன் திறந்து வைத்து பேசியது:
ஆளுமைத்திறன் மற்றும் வழிநடத்தும் திறன்மிக்கவர் மேஜர் சரவணன். அவருடைய வீரத்தையும், கார்கில் வெற்றியையும் நாம் கொண்டாடுகிறோம்.
1999ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி, அப்துல் பைஸ் என்ற பாகிஸ்தான் வீரரை ஸ்னைப்பர் துப்பாக்கிகுண்டு மூலமாக இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதில் முக்கிய பங்காற்றியது மேஜர் சரவணன் மற்றும் அவரது அணியாகும். எதிரி முகாமை தாக்கும் சமயத்தில் சரவணன் காயமடைந்தாலும், தனது அணியை சிறப்பாக வழிநடத்தினார். தனது உயிரைத் தியாகம் செய்து எதிரி முகாமினை அழித்தொழித்தார் என்றார் அவர்.
முன்னதாக, உயிர் தியாகம் செய்து வெற்றியை பரிசளித்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டதுடன், வீரசக்ரா விருது வழங்கப்பட்ட மேஜர் சரவணனின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் ராணுவ அதிகாரிகள், என்சிசி மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.