திருச்சியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை, மாநகராட்சியினர் அகற்றம் செய்யாததால், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களே சரிசெய்தனர்.
திருச்சி மாநகராட்சி 20ஆவது வார்டு வரகனேரி, கல்பாளையம் பகுதியில் கடந்த ஒருவாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறி துர்நாற்றத்துடன், சுகாதாரமற்ற நிலையை ஏற்படுத்தியது. இது குறித்து மாநகராட்சியினருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், அடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனையடுத்து, பாலக்கரை பகுதி பாஜக மண்டல தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் செல்வம், மற்றும் ஓபிசி பிரிவு நிர்வாகி பார்த்திபன் உள்ளிட்ட சிலர் பொதுமக்களின் துணையுடன், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். பாதாள சாக்கடை அடைப்பை பொதுமக்களே அகற்றும் தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். பின்னர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.