திருச்சி

கொலை சதி நடப்பதாக முகிலன் புகார்: திருச்சி நீதிமன்றத்தில் விசாரணை

27th Jul 2019 09:16 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையில் போலீஸார்  தன்னை தாக்கியதாகவும், தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும் சமூக ஆர்வலர் முகிலன் தெரிவித்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன்(52). கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்ட பிறகு திடீரென காணாமல் போன இவர், திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். 
இதற்கிடையே முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், அவருடன் இணைந்து  பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற பெண் ஒருவர் புகார் கொடுத்தார். 
இந்த வழக்கு கரூர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முகிலனை கைது செய்து கரூர் நீதிபதி வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.  அப்போது ஜூலை 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
இதற்கிடையே முகிலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரிய மனு மீது ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் கரூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 
அப்போது, ஆஜரான முகிலன்,  தான் சிறையில் தாக்கப்பட்டதாகவும், வழக்குரைஞருடன் கலந்து ஆலோசிக்க தன்னை அனுமதிக்காமலேயே  காவலில் எடுக்க அழைத்து வந்துவிட்டதாகவும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து மனுக்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அப்போது நீதிபதி அனுமதியளித்த 3 மணி நேர போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
கொலை சதி-விசாரணை: சிறையில் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக  முகிலன் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக திருச்சி 3ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகல் 3 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, முகிலனிடம் அறை கதவுகள் மூடப்பட்ட   நிலையில் நீதிபதி திரிவேணி விசாரணை நடத்தினார். திருச்சி மத்திய சிறை ஜெயிலர் ரமேஷிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  
பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முகிலன், ""எனக்கு 22ஆம் தேதி சிறையில் நடந்தவை குறித்து நீதிபதியிடம் மனுவாக அளித்துள்ளேன். அது குறித்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார். தமிழக அரசு போராட்டகாரர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு வடமாநில காவல்துறை அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது'' என வேனில் ஏறும் போது குற்றம்சாட்டி முழக்கமிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT