திருச்சி

"சுகாதாரம் வீட்டிலிருந்தே பேணப்பட வேண்டும்' 

22nd Jul 2019 09:39 AM

ADVERTISEMENT

சுகாதாரம் என்பது பெண்களால் வீட்டிலிருந்தே பேணப்பட வேண்டும் என்றார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர்.
திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் மாதவிடாய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: 
மாதவிடாய் விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அவசியமாகும். முன் காலத்தில், மாதவிடாய் காலங்களில் பெண்கள், ஆண்களைக் காண்பது கூடாது என்ற நிலை இருந்துவந்தது.  தற்போது அவ்வாறு இல்லாவிட்டாலும் இன்னும் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்படவேண்டும்.
 இந்த விஷயத்தில் சுகாதாரம் என்பது மிக முக்கியமான விஷயம். இந்த சுகாதாரம் வீடுகள்தோறும் பின்பற்றப்படுவதன் மூலம் வீடுகளிலிருந்தே சுகாதாரம் பேணப்பட வேண்டும். அப்போது தான் நாடு சுகாதாரமாக திகழ முடியும். 
ஆணுக்கு பெண் அனைத்து விதத்திலும் சமம் எனக் கூறப்படுகிறது.  ஆனால் பெண்கள் எண்ணிக்கை நாட்டில் குறைந்து வருவது கவனிக்க வேண்டியதாகும். அதாவது 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற நிலை உள்ளது. கருக்கலைப்பு மூலம் பெண் சிசுக்கள் கருவிலேயே  அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதில் மருத்துவர்களுக்கும் பங்குண்டு. காரணமானவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பெண்கள் ரத்தசோகை  பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகளவில் சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார். 
நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னாள் துணைவேந்தர் கே. மீனா, மருத்துவர் கண்ணகி சந்திரசேகரன்,  ஸ்கோப் தொண்டு நிறுவன நிர்வாகி சுப்புராமன், கல்லூரி முதல்வர் எஸ். வித்யாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT