ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தலைமையில் புதிய கட்டடத்துக்கு பள்ளியை மாற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அரசின் அறிவிப்புவரும் வரையில் பழைய கட்டடத்திலேயே பள்ளி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள 1928-இல் தொடங்கப்பட்ட
பழைமையான அய்யனார் உயர்நிலைப்பள்ளியை புதிய கட்டடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களது பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வியாழக்கிழமை மாலை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மேலூர் பகுதி மக்கள் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் 4 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது.
இங்கிருந்து அங்கு சென்று படித்துவரும் எங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பும் கிடையாது என்றனர். பின்னர் இரு தரப்பு கருத்துகளையும் அரசுக்கு தெரியப்படுத்தி அரசு எடுக்கும் முடிவு குறித்த அறிவிப்பு வரும் வரை பழைய கட்டடத்திலேயே பள்ளி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதுவரை யாரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது.