திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்குளம் தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி திங்கள்கிழமை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் பாப்பான்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் தூர் வாரப்படாத நிலையில் கடந்த 2017 - 18 ஆம் நிதியாண்டில் உலக வங்கி, 100 நாள் வேலைஉறுதித் திட்டம், மழை நீர் செரிவு திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ரூ.5.45 கோடி மதிப்பில் குளம் செப்பனிடப்பட்டிருப்பதாக தகவல் பலகை வைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் குளம் தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினர். ஆனால் புகார் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.பா.சின்னத்துரை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாப்பான்குளத்தில் இறங்கி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பொது பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.