மனிதநேயத்தைக் கேள்விக்குறியாக்கும் தீவிரவாதத்தை என்றைக்கும் ஆதரிக்க மாட்டோம் என்றார் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலர் தாவூத் கைஸர்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய அவர் மேலும் தெரிவித்தது:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிரான தொடர் பிரசாரம் வரும் ஜூலை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
பிரசாரத்தின் நோக்கங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவதோடு மட்டுமின்றி மனிதநேயத்தைக் கேள்விக்குறியாக்கும் தீவிரவாதத்தை என்றைக்கும் ஆதரிக்க மாட்டோம். இதை மையமாக வைத்து சுவர் விளம்பரங்கள், மெகா ரத்த தான முகாம்கள், மனிதச் சங்கிலி, பேரணி நடத்தப்படவுள்ளது.
மேலும் 2 கோடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்படும். வடமாநிலங்களில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தேசியப் புலனாய்வு பிரிவு விசாரணை என்ற பெயரில் அரசியல்வாதி போலச் செயல்படுகிறது என்றார் அவர். கூட்டத்தில் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் சுலைமான், மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர், செயலர் சைய்யது ஜாஹீர், துணைத் தலைவர் உமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.