திருச்சி

குப்பைகளைத் தரம்பிரித்து வழங்காததே பெரும் பிரச்னை: நெகிழி இல்லா தமிழகம் மாநாட்டில் தகவல்

15th Jul 2019 08:42 AM

ADVERTISEMENT

குப்பைகளைத் தரம்பிரித்து வழங்காதது இந்தியாவுக்கு  மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும் பிரச்னையாக உள்ளது என்றார் திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன்.
திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் நெகிழி இல்லா தமிழகம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாநில மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் காலம் என்ற நூலை வெளியிட்ட அவர் மேலும் பேசியது: திருச்சி மாநகராட்சி குப்பைகளைக் கையாள்வதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நெகிழிப் பயன்பாட்டை குறைத்தல்,  மறு சுழற்சி செய்தல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.  
இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்காததே மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.  திருச்சி மாநகராட்சியில்  2017 ஜூன் மாதம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்கும் திட்டம் தொடங்கியபோது, இது நடக்காத காரியம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், தற்போது மாநகரில்  சுமார் 2.50 லட்சம் வீடுகளில் 80 சதவீதம் பேர் குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்கின்றனர்.
மக்காத குப்பையில் சுமார் 80 சதவீதம்  நெகிழிப் பொருட்கள் உள்ளன. இவை மறுசுழற்சிக்கும், சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும்  விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் மாநகராட்சி சுமார் ரூ.3.5 கோடி வருமானம் ஈட்டி, துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. 
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் குப்பைக் கிடங்கு  ரூ. 49 கோடியில் அப்புறப்படுத்தப்பட்டு, மிகப் பெரிய பூங்காவாக மாற்றப்படும். தவிர நாட்டிலேயே முதல் முறையாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு, குப்பையை உரமாக்கும் திட்டம் மற்றும் நெகிழி பயன்பாடு இல்லாத வீடுகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை திருச்சி மாநகராட்சி வழங்குகிறது. இதை மருத்துவமனையில் ரூ.1 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.
தீர்மானங்கள் :  14 வகையான நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் மீதான தடையை  மீண்டும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கான மாற்றுப்பொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தி, அவை குறைந்த விலையில் கிடைக்க வழிகாட்ட வேண்டும். 
குப்பைகளை மக்கும் மக்கா என வகைப்படுத்தி வீடுகளிலேயே பிரித்து பெற்றுக்கொள்ளப்படும் குப்பை மேலாண்மை திட்டத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விதைகள், துணிப்பைகள், நெகிழி மாற்றுப்பொருட்கள் மாநாட்டில் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்வில் தேசியக்கல்லூரி முதல்வர் ஆர். சுந்தரராமன், நகரப் பொறியாளர் அமுதவள்ளி,  மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ. மயில்வாகனன் (சட்டம் ஒழுங்கு), ஸ்கோப் தொண்டு நிறுவன நிர்வாகி சுப்புராமன் , பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி வெற்றிச்செல்வன், மஞ்சப்பை இயக்க நிர்வாகி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.  நிகழ்வை, கிரீன் பேஜஸ் அமைப்பு  நிறுவனர் சந்தானம் ராமசாமி, சைன் திருச்சி அமைப்பின் நிறுவனர் மனோஜ் தர்மா, புதிய பயணம் அமைப்பு நிறுவனர் ராகவன் சிவராமன், பெருவை புகழேந்தி, கௌரிஷ் ஜெயபால், நல்லப்பன் தங்கராசு உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT