அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் இ-டெண்டர் மூலமாக மட்டும் ரூ. 2500 கோடி வரை சேமிக்கப்பட்டது என்றார் மின்வாரிய தலைமைப் பொறியாளர் (நிலக்கரி) என். சத்தியசீலன்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவர் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி நிறைவு பெற்றன. நிறைவு விழாவில் போட்டியில் வென்றோருக்கு கோப்பைகளை பரிசாக வழங்கி என். சத்தியசீலன் மேலும் பேசியது: அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி போதுமான அளவு இருப்பு உள்ளது. ஆண்டுக்கு 210 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.இதில் 160 லட்சம் டன் நிலக்கரி இந்தியாவிலேயே கிடைக்கிறது. மீதித் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியாவிலிருந்து அதிக நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம்.அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இ-டெண்டர் மூலமாக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2500 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு நபர் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி மதிப்பிலான மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மின்வாரிய ஊழியர்கள் தங்களது பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் தாங்களாகவே முன்வந்து இது நமது நிறுவனம் என்ற உணர்வோடு பணியாற்றிட வேண்டும் என்றார் அவர்.
மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் மா. வளர்மதி தலைமை வகித்தார். மேற்பார்வைப் பொறியாளர்கள் விநோதன் (கரூர்) சேகர் (நாகப்பட்டினம்)கருப்பையா (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மண்டல அணியும், தடகளப் போட்டிகளில் திருச்சி மண்டல அணியும் முதலிடம் பெற்றன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை மண்டல அணியினர் பெற்றனர். திருச்சி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ஆர்.ஆர். சாந்தி வரவேற்றார். திருச்சி மண்டல விழாக்குழு பொறுப்பாளர் பழனியப்பன் நன்றி கூறினார். பல்வேறு மண்டல மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.