திருச்சி

பொது சிவில் சட்டம் சாத்தியமற்றது: பழ. கருப்பையா

12th Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது எப்போதும் சாத்தியமற்றது என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா தெரிவித்தார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மஜ்லிசுல் உலமா நூற்றாண்டு விழாவில் அவர் பேசியது:
பிற மதங்களில் குறிப்பிடாத வகையில் இஸ்லாம் மதத்தில் மட்டும்தான் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தூங்கி எழுவதிலிருந்து, மீண்டும் தூங்கும் வரையில் அடிப்படைக் கோட்பாடுகளை கற்றுத் தந்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் பங்கு அளப்பரியது. உப்புச் சத்தியாகிரகம், கிலாபத் இயக்கம், சுதந்திரப் போராட்டம், வெள்ளையேனே வெளியேறு இயக்கம் என அனைத்திலும் இஸ்லாமியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்லாது சமூக வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்களை கட்டமைப்பதிலும் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இந்தியாவில்தான் பல்வேறு மொழி பேசும் மக்கள், பல்வேறு இனத்தவர்கள், மதத்தவர்கள் என பன்முகத்தன்மை கொண்டு விளங்குகின்றனர். வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத இந்தச் சிறப்பை, சமயச் சார்பற்ற நாடு இந்தியா என்பதை உருவாக்கியவர் மகாத்மா காந்தியடிகள்  மட்டுமே. பல நாடுகளில் பெரும்பான்மை மதமே அரசு மதமாக இருந்தாலும், இந்தியாவில் இந்து மதம் அரசு மதமாக இருக்கக் கூடாது என்ற தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தார் மகாத்மா காந்தி. அதன் காரணமாக நேருவும் அந்த வழியில் அரசமைத்தார். அது 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.  நாடு முழுவதும் ஒரே சட்டம், ஒரே தேசம், ஒரே மதம் என்ற கொள்கையைத் திணிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தண்டனைக்குரியதாக கருதப்பட்டவை, தண்டனை இல்லாதவையாகவும், தண்டனை இல்லாதவை தண்டனைக்குரிய குற்றங்களாகவும் மாற்றப்படுகின்றன. 
இஸ்லாம் மதத்தில் மணமுறிவு என்பதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டால் உலக நாடுகளால் இந்தியா கேலிக்குரிய நாடாகும். கிரிமினல் சட்டங்கள் பொதுவானதாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு சிவில் சட்டங்கள் உள்ள நிலையில், பல்வேறு மதத்தினர் வாழும் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது என்பது எக்காலத்திலும் முடியாது. இந்திய மக்களும் அதை அனுமதிக்கமாட்டார்கள் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT