திருச்சி மாவட்டத்தில் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டத்தில் பதிவு செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கு பதிவு செய்த நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா, ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தகுதியானோருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் சு. சிவராசு பேசியது: திருச்சி மாவட்டத்தில் 1,117 நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பம் அளித்திருந்தனர். இதில், அனைத்து வசதிகளும் உள்ளதா என 225 நிறுவனங்களை ஆய்வு செய்ததில் 147 நிறுவனங்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிறுவனங்களும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சான்றிதழ் பெற வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் சம்சாத்பேகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.