பன்னாங்கொம்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
பன்னாங்கொம்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மணப்பாறை ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
மணப்பாறை ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர்த் தேவையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும். மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு உள்ள பழைய மனமகிழ் மன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தி அரசு பயன்பட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொதுச் செயலர் செந்தில்தீபக், மாவட்டச் செயலர்கள் லலிதா அழகப்பன், தாளக்குடி விஜய், இளைஞரணி மாவட்டப் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாதாரப்பிரிவு மாவட்ட துணை தலைவர் கோல்டு.கோபால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மணப்பாறை வழக்குரைஞர் சங்கத் துணைத் தலைவர்.சி.மகேந்திரன், சமுத்திரம் ஜெயவீரபாண்டியன் ஆகியோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பொன்னம்பட்டி பேரூர் பகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் துவரங்குறிச்சியில் நடைபெற்றது.
மாவட்டத் துணைத்தலைவர் பிரின்ஸ் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6000 புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஒன்றியத் தலைவர் ரகுபதி, உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ஆர்.சுப்பிரமணியன், பொன்னம்பட்டி தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.