திருச்சி

ஏரி, பாசனக் கால்வாய்களைத் தூர்வாரக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

6th Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

மழைக் காலத்துக்கு முன்பாக ஏரி, குளம், பாசனக் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என வலியுறுத்தி, திருச்சியில் பொதுப்பணித் துறையின்ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட  அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி, அமைப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்கச் செய்தனர். போராட்டத்தை கைவிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பூ. விசுவநாதன் கூறியது:
2019-20ஆம் ஆண்டுக்கு ஏரி, குளங்கள், கால்வாய்களைத் தூர்வாரி  குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்துக்கு மட்டும் ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கியுள்ள நிதியை முழுமையாக செலவிட்டு, மழை தொடங்குவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும். திருச்சி கோட்டத்தில்  பெருவளை வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் ஆகியவற்றை உடனடியாக தூர்வார வேண்டும்.  பங்குனி வாய்க்கால் மதகுகளை சீரமைக்க வேண்டும். அழகியமணவாளம் முதல் மண்ணச்சநல்லூர் வரை கால்வாய் தூர்ந்துள்ளதை ஆழப்படுத்தி, கரையைப் பலப்படுத்த வேண்டும். காவிரி நீர் கடைமடை வரை தடையின்றி செல்லவும், வாய்க்காலை நம்பி பாசனம் பெறும் அனைத்து நிலங்களும் பயன்பெறும் வகையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பணிகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டாலோ, ஒதுக்கிய நிதியை விரயம் செய்தாலோ தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT