திருச்சி

மானியக் கோரிக்கையில் கைவிரிப்பு: பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றம்!

4th Jul 2019 09:01 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய பற்றாக்குறையால் கடந்த  9 ஆண்டுகளுக்கு மேலாக பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கையில் ஊதிய உயர்வு குறித்த தகவல் தெரிவிக்கப்படலாம் என காத்திருந்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்வேறுவகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, 6, 7, 8ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி,  இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்டவற்றை கற்றுத்தருவதற்காக 2011-12ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 16,549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5ஆயிரம் முதலில் வழங்கப்பட்டது. பின்னர், 2014இல் மீண்டும் ஜெயலலிதாவே 40 சதவீத ஊதிய உயர்வு அறிவித்தார். இதையடுத்து தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரமாக உயர்ந்தது.
அதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கைகளை சட்டப்பேரவைக்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர்.
கடந்த 2017 ஆகஸ்டில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால், பகுதிநேர ஆசிரியர்களின் பணி அவசியம் எனக் கருதி 10 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொகுப்பூதியம் ரூ.7,700 ஆக உயர்ந்தது. இப்போதைய விலைவாசி உயர்வில் இந்த ஊதியம் பற்றாக்குறையானது என்கின்றனர் பகுதிநேர ஆசிரியர்கள். பணியின்பெயர்தான் பகுதிநேர ஆசிரியர், ஆனால் நாள் முழுவதும் பணி உள்ளது என்கின்றனர். பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், வருகைப் பதிவு பதிவேற்றம், உதவித் தொகை பணிகள் மற்றும் அரசின் திட்டங்களை மாணவர்களுக்கு பெறுவதற்கான அனைத்து கணினி வழித் தொடர்பு பணிகளையும் பகுதிநேர ஆசிரியர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
இதர மாநிலங்களில் இதே பகுதிநேர ஆசிரியர் என்ற பதவியில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் நியமிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், துறைத் தேர்வு நடத்தி நிரந்தரப்படுத்தப்படுகின்றனர். ஆனால், தமிழக அரசில் கல்வித்துறையைத் தவிர்த்து இதர அனைத்துத் துறைகளிலும் தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிவோருக்கு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் சாத்தியமாகிறது. ஆனால், மாணவர்களின் கல்வி அறிவை பெருக்கும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அரசு கருணை காட்டுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள். 
பற்றாக்குறை ஊதியம் மட்டுமல்லாது ஆண்டுதோறும் மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆசிரியரும் ரூ.50 ஆயிரம் வரை ஊதிய இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், மே மாதம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடர்பான இதர பணிகளை மேற்கொள்ளச் செய்வது வாடிக்கையாக உள்ளது என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது: தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கட்டுப்படியான ஊதியம்,  ஈஎஸ்ஐ, பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, ஆண்டுதோறும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் 1,325 நிரந்தரப்பணியிடங்களுக்கு கடந்தாண்டு தேர்வு நடத்தியபோதும், நிகழாண்டு 814 கணினி ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்களுக்கான தேர்விலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டனர். இத்தகைய பாராமுக நடவடிக்கைகளால் பலர் பணியிலிருந்து விலகிவிட்டனர். வயது மூப்பால் பலர் இறந்துவிட்டனர். இதன்காரணமாக 16,549 பணியிடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. அரசாணைப்படி 16,549 ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியமாக ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கப்படும். காலிப் பணியிடங்களுக்கான ஒதுக்கீட்டை பிரித்து வழங்கினாலே இப்போதுள்ள 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை ஊதியம் என்ற பிரச்னையே இருக்காது. பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் விடுபட்டிருந்தாலும் நடப்பு பேரவைக் கூட்டத்தொடரில் 110ஆவது விதியின்படி அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT