திருச்சி

தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்காக 9 ஒன்றியங்களில் சிறப்பு முகாம்

4th Jul 2019 09:29 AM

ADVERTISEMENT

மத்திய அரசு உத்தரவுப்படி நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துவ அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதற்காக, திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சகத்தால்  மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, தற்போதைய புகைப்படம், கையொப்பம் அல்லது கைவிரல் ரேகை ஆகியவற்றின் ஒளி நகலுடன் அருகில் உள்ள இ - சேவை மையங்களில் ரூ. 20 ஐ இணையதளப் பதிவு கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடையாள அட்டையை வழங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில் ஒன்றியம் வாரியாக முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (ஜூலை 4) வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூலை 5ஆம் தேதியும், லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூலை 7ஆம் தேதி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜூலை 11, மணப்பாறை ஒன்றியத்தில் ஜூலை 12, முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ஜூலை 16 முகாம் நடைபெறவுள்ளது.
மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூலை 18ஆம் தேதியும், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூலை 19ஆம் தேதி, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜூலை 23ஆம் தேதியும் முகாம் நடைபெறவுள்ளது.
இணையத்தில் பதிவு செய்யாதவர்களும், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்யலாம். 
இல்லையெனில், w‌w‌w.‌s‌w​a‌v‌l​a‌m​b​a‌n​c​a‌r‌d.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் பயனாளிகளே நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT