திருச்சி

கடையடைப்பு போராட்டம் வாபஸ்: வணிகர் சங்கம் அறிவிப்பு

4th Jul 2019 09:07 AM

ADVERTISEMENT

திருச்சியில் ஜூலை 9 ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரில் முக்கிய வணிகப் பகுதிகளில் நடைபாதைகளில் செய்யப்பட்டுள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்ற வலியுறுத்தி, திருச்சி மலைக்கோட்டை பகுதி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஜூலை 9 ஆம்தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை பகுதி அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் கோவிந்தராஜூலு தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் மாநகராட்சி  ஆணையர் ந. ரவிச்சந்திரனை  புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை  மனு அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து, வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அதன்பிறகு வணிகர் சங்கத் தலைவர் கோவிந்தராஜூலு கூறுகையில், திருச்சியில் நடைபாதை வியாபாரிகள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உயர்நீதிமன்ற  உத்தரவுப்படி 45 நாள்களில் குழு அமைக்கப்படும். அதன்பிறகு 60 நாள்களில் ஆக்கிரமிப்புகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார். அவரது உத்திரவாதத்தை ஏற்று, ஜூலை 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT