மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.2.50 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகைகள் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கண்டிராஜா அரண்மனை வகையறாவைச் சேர்ந்த ஸ்ரீராமுலு மகன் செல்வகுமார்(62). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர், மணப்பாறை- திண்டுக்கல் சாலையில் வசித்து வருகிறார்.
திருச்சியிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்த செல்வகுமார், பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உள்ளேசென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஷர்மு மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனர். திருட்டு குறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.