திருச்சி

"மக்கள் சேவை பணிகளில் மத்திய மண்டல அஞ்சல்துறை முதலிடம்'

2nd Jul 2019 09:36 AM

ADVERTISEMENT

மக்கள் சேவைக்கான பணிகளை வழங்குவதில் மத்திய மண்டல அஞ்சல்துறை  முதலிடத்தில் உள்ளது என்றார் அதன் தலைவர் சுமதி ரவிச்சந்திரன். 
திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற டிஜிட்டல் இந்தியாவின் 5 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:
மற்ற மண்டலங்களைக் காட்டிலும், மத்திய  மண்டல அஞ்சல் துறை வங்கி சேவை, விரைவு அஞ்சல்,  ஆதார், கிராம வங்கி சேவை என தான் மேற்கொள்ளும் பணிகளில் சிறந்து விளங்குகிறது. 
மக்கள் சேவைக்கான பணிகளை வழங்குவதில் திருச்சி மண்டலம் முதலிடத்தில் உள்ளது. தற்போது மேற்கொள்ளும் மக்களுக்கான சேவையை  காட்டிலும் சிறந்த சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 
அஞ்சல் சேவைகள் இயக்குநர் ஆர்.  தாமஸ் லூர்துராஜ் பேசியது:
 டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அஞ்சல்துறை சேவை கணினி மயமாக்கப்பட்டு, வங்கி சேவை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பணபரிவர்த்தனைகளை இணையதளம் மூலம் மேற்கொள்ளும் வசதி உள்ளது. காப்பீட்டுத் தொகை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
அஞ்சல் வங்கி சேவை தொடங்கப்பட்டதன் நோக்கமே கிராம மக்கள் வங்கி  சேவையைப் பெறுவதற்காகத்தான்.  இந்த சேவையைக் கிராமப்புறங்களில் கொண்டு செல்வதில் தொடக்கத்தில் சிரமம் ஏற்பட்டாலும், அவை சரி செய்யப்பட்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.  அரசு மானியங்களை அஞ்சல் வங்கி சேவை மூலம் அளிக்கப்படுவதால் விவசாயிகள், முதியவர்கள் இந்த சேவையை பெற முயற்சிக்க வேண்டும். 2-ஆம்  கட்டமாக 1 லட்சம் ஏடிஎம்  அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.ஆதார் சேவையில் திருச்சி மண்டலம் முதலிடத்தில் உள்ளது என்றார். 
முன்னதாக அஞ்சல்துறையில் காப்பீடுச் செய்தவர்களுக்கு காப்பீட்டுப்  பத்திரம் மற்றும் அஞ்சல் வங்கி சேவைக்கான கணக்குப் புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்வில் முதுநிலைக்  கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், உதவி இயக்குநர் சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT