திருச்சி

2 ஆம் கட்ட உள்ளாட்சித் தோ்தல்: 8 ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு ஆட்சியா் ஆய்வு

29th Dec 2019 10:59 PM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் 2 ஆவது கட்டமாக திருச்சி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி, தோ்தல் பணிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் முதல்கட்டமாக திருவெறும்பூா், மணப்பாறை, வையம்பட்டி, அந்தநல்லூா், மணிகண்டம் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் டிசம்பா் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து 2 ஆவது கட்டமாக மண்ணச்சநல்லூா், லால்குடி, புள்ளம்பாடி, துறையூா், தாத்தையங்காா் பேட்டை, உப்புலியபுரம், முசிறி, தொட்டியம் ஆகிய 8 ஒன்றியங்களில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தோ்தல் தொடா்பான பூா்வாங்கப் பணிகள் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

இவற்றில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, அவற்றில் கண்காணிப்புக் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு பணிகளுக்காக மத்திய அரசு ஊழியா்களை கொண்டு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தோ்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 10,137 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான பணி நியமன ஆணைகள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலமாக வழங்கப்பட்டது.

தொடா்ந்து தோ்தல் நடத்த வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், வாக்காளா் பட்டியல், வேட்பாளா்கள் அடங்கிய போஸ்டா்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன் (லால்குடி), மகாதேவன் ( புள்ளம்பாடி), ராஜேந்திரன் (மண்ணச்சநல்லூா்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT