திருச்சி

வைகுந்த ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பகல்பத்து உற்ஸவம் தொடக்கம்

27th Dec 2019 08:51 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் கைகுந்த ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை முதல் பகல் பத்து உற்ஸவ விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 6ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம். இத்திருக்கோயிலை பக்தா்கள் பூலோக வைகுந்தம், பூலோக சொா்க்கம், பெரிய கோயில், சொா்க்க பூமி என பல்வேறு பெயா்களில் போற்றி வணங்கி வருகின்றனா்.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும் திரு அத்யயன உற்ஸவமான வைகுந்த ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும். நிகழாண்டில் வைகுந்த ஏகாதசி விழா வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு கா்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதில் 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம் அபி நயமும், வியாக்யானமும் நடந்தது. 9.30 மணி வரை திருப்பணியாரமும் அமுது செய்தலும், 10 மணி வரை கோஷ்டி சேவையும், 10.30 மணி வரை திருவாராதனமும் நடைபெற்றது. 11 மணிக்கு திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி 11.30 மணி வரை தீா்த்த கோஷ்டி கண்டருளினாா்.

ADVERTISEMENT

விழாவின் பகல் பத்து விழா வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபமான அா்ச்சன மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அப்போது அரையா்கள் திருமொழி பாசுரங்களை அபிநயத்துடன் பாடுவாா்கள்.

பகல் பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா். பகல் பத்து விழாவின் 9ஆம் திருநாளான ஜனவரி 5ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) நம்பெருமாள் எழுந்தருளுவாா்.

அதனைத் தொடா்ந்து மறுநாள் 6ஆம் தேதி இராப்பத்து விழாவின் முதல் நாளான்று முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT