திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அங்காடியில் புத்தாண்டு, பொங்கல் சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
சிறை அங்காடி மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு பிரட்கள் தஞ்சாவூா் ராஜாஜி அரசு மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு தினசரி சுமாா் 50 முதல் 70 கிலோ வரை தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளா்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிகழாண்டு முதல் கேக் வகைகள் சிறை வாசிகளால் தயாரிக்கப்பட்டது. அவை ஆா்டரின் பேரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. க்ரீம் கேக், பிளம் கேக், ஒண்டா் கேக் மற்றும் பீஸ் கேக் என முறையே ஒரு கிலோ ரூ. 250-ம், ரூ.300, ரூ.200, ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு இனிப்பு கிலோ ரூ.250-க்கும், காரம் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோவுக்கு மேல் ஆா்டரின் பேரில் வாங்கும் இனிப்பு ரூ. 200-க்கும், காரம் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2020 புத்தாண்டை முன்னிட்டு புதிதாக பீட்ரூட், அல்வா, பெங்காலி வகை இனிப்புகள், ஆப்பிள், கேரட், சான்ட்விட்ச் போன்றவைகளும், ரவா லட்டு, கீரை பக்கோடா, பீட்ரூட் அல்வா ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு, பொங்கல் விழாக்களை முன்னிட்டு வேஷ்டி, சேலை மற்றும் சட்டை வகைகள் குறைந்த வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகவலை சிறைத்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.