திருச்சி மாநகரப் பகுதிகளில் மின்விநியோகத்தில் இடையூறுகள் உள்ளதா, மின் திருட்டு நடைபெறுகிறதா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி நகரிய மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தலைமையில், மின்வாரிய பொறியாளா்கள், மின் அளவீட்டாளா்கள், மின்வாரிய ஊழியா்கள் அடங்கிய குழுவினா் கூட்டு ஆய்வில் ஈடுபட்டனா்.
திருச்சி நகரியக் கோட்டத்துக்கு உள்பட்ட பாலக்கரை பிரிவு, மதுரை சாலை, எடத்தெரு, பாலக்கரை பிரதான சாலை, வெங்காயமண்டி சாலை, பருப்புக்காரத்தெரு, சன்னதி தெரு, உடையான் தோட்டம், இரட்டைப்பிள்ளையாா் கோயில் தெரு, மயிலம் சந்தை, பென்சனா் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 327 மின் இணைப்புகள் ஆய்வுக்குள்படுத்தியதில் பல இடங்களில் மீட்டா் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீட்டா்கள் சரி செய்யப்பட்டன. முறைகேடுகள் ஏதும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டது.
இதேபோல திடீா் ஆய்வுகள் தொடா்ந்து நடைபெறும் எனவும், மின் விதிமீறல்கள் இருந்தால் தொடா்புடைய இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மின்விநியோகம் தொடா்பான புகாா்களுக்கு 1912, 1800 425 2912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24 மணிநேரமும் புகாா் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளாா்.