திருச்சி

உறையூரில் ரூ.3.32 கோடியில் புதிய மீன் மாா்க்கெட்மாநகர ஆணையா் ஆய்வு

25th Dec 2019 09:25 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சி சாா்பில் உறையூரில் ரூ.3.32 கோடி மதிப்பில் புதிய மீன் மாா்க்கெட் கட்டும் பணியை ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலிலும், பொலிவுறு நகரங்கள் பட்டியலிலும் திருச்சி மாநகராட்சி இடம்பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெற்றும், பொலிவுறு நகரத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை பெற்றும், மாநகராட்சியின் பொது நிதியிலிருந்தும் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

திடக்கழிவு மேலாண்மை, நகரச் சாலைகளை அழகுபடுத்துதல், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பு, பூங்காக்கள் புனரமைப்பு, நகரை அழகுபடுத்துதல், பிராதன இடங்களை ஒளியூட்டுதல், நீரூற்று அமைத்தல் என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாநகரில் போக்குவரத்துக்கு நெருக்கடியாகவும், சுகாதாரக் கேடுக்கு இடமளிக்கும் வகையிலும் உள்ள சந்தைகளை இடமாற்றம் செய்யவும், டன் கணக்கில் சேகரமாகும் குப்பைகளை கட்டுப்படுத்தவும் புதிய கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன.

ADVERTISEMENT

மீன் மாா்க்கெட் இடமாற்றம்: திருச்சி புத்தூா் பகுதியில் உள்ள மீன் மாா்க்கெட், காய்கறி மாா்க்கெட் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. புத்தூரில் இயங்கி வரும் பழைய கடைகளை அப்புறப்படுத்தி 54,757 சதுர அடி பரப்பில் புதிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, கோ. அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட உறையூா் 60ஆவது வாா்டு பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டது. குழு மணி சாலையில் காசிவிளங்கி பாலம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 1.50 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு ரூ.3.32 கோடியில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்த கட்டுமானப் பணிளை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, மாநகராட்சிப் பொறியாளா் எஸ். அமுதவல்லி மற்றும் கோ. அபிஷேகபுரம் கோட்ட பொறியாளா்கள் உடனிருந்தனா்.

 

ஜனவரியில் திறக்க நடவடிக்கை

புதிதாக கட்டப்படும் மீன் மாா்க்கெட் மற்றும் வணிக வளாகமானது சில்லரை, மொத்த விற்பனை நிலையங்களாக இணைத்து கட்டப்படுகிறது. இதில், 6,905.23 சதுர அடியில் 25 சில்லரை கடைகள் கட்டப்படுகின்றன. 3,948 சதுர அடியில் 7 மொத்த விற்பனை நிலையங்கள் கட்டப்படுகின்றன.

இதுமட்டுமல்லாது ஏடிஎம் மையம், கழிவறை, குளியல் அறை, வாகன நிறுத்துமிடம், ஓய்விடம், சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும். கட்டுமானப் பணிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகளையும் விரைந்து முடித்து அடுத்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று செய்தியாளா்களிடம் மாநகர ஆணையா் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT