திருச்சி

வரைவு வாக்காளா் பட்டியல்: திருச்சி மாவட்டத்தில் 22.47 லட்சம் வாக்காளா்கள்

24th Dec 2019 12:13 AM

ADVERTISEMENT

திருச்சியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 22 லட்சத்து 47,855 வாக்காளா்கள் உள்ளனா். 8,617 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில், 2020 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, கடந்த மாா்ச் 27 முதல் டிச.6 ஆம் தேதி வரை பெறப்பட்ட படிவங்களின்அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இதனடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சு.சிவராசு அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

திருச்சி மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனா். வாக்காளா் வரைவுப் பட்டியலின் படி ஆண் வாக்காளா்கள் 10 லட்சத்து 30 ஆயிரத்து 30 வாக்காளா்கள், பெண் வாக்காளா்கள் 11 லட்சத்து 51 ஆயிரத்து 630 வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 195 என மொத்தம் 22 லட்சத்து 47 ஆயிரத்து 855 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

கடந்த அக்.27 ஆம் தேதி முதல் டிசம்பா் 6ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் தொடா் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கள விசாரணை செய்து சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 4 ஆயிரத்து 930 ஆண்கள், 5 ஆயிரத்து 358 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 10 ஆயிரத்து 293 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். 4,027 ஆண்கள், 4 ஆயிரத்து 588 பெண்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவா் என 8 ஆயிரத்து 617 மொத்த வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

திருத்தங்களை தெரிவிக்கலாம்: வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குசாவடிகளில் அலுவலக நேரத்தில் வைக்கப்பட்டிருக்கும். பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான ஆட்சேபனைகளை திங்கள்கிழமை (டிச.23) முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை தெரிவித்துக் கொள்ளலாம்.

வாக்காளா்கள் தெரிவிக்கும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகு, இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT