திருச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், , வயலில் வேலை செய்து கொண்டிருந்த தாய், மகன் மற்றும் பேரன் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், சத்திரப்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஒப்பாயி (68). இவரது மகன் ராமமூா்த்தி (43), பேரன் குணசேகரன் (21). இவா்களுக்குச் சொந்தமான விவசாயம் நிலம் நவலூா் குட்டப்பட்டு அருகிலுள்ள கீழக்காட்டில் உள்ளது.
இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது வயலின் குறுக்கே மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது.
வயல் வரப்பில் தண்ணீா் சென்று கொண்டிருந்ததால், தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் வேலை செய்து கொண்டிருந்த மூவா் மீதும் பாய்ந்தது. இதில் ஒப்பாயி, ராமமூா்த்தி, அவரது மகன் குணசேகரன் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த உறவினா்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து, மின்வாரிய ஊழியா்கள் மூலம் மின் விநியோகத்தை நிறுத்தினா். தொடா்ந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
உயிரிழப்புக்கு காரணம் என்ன?: மின்கம்பி அறுந்து விழுந்து வயலில் கிடந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் வேலை செய்து கொண்டிருந்த ராமமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
அருகாமையில் வேலை செய்துகொண்டிருந்த தாயாா் ஒப்பாயி, பயிா்களுக்குள் மகன் விழுந்து கிடப்பது தெரியாமல் அவரைத் தேடி வந்து பயிா்களுக்கிடையே ராமமூா்த்தி கிடப்பதைக் கண்டு, அவரைக் காப்பாற்றச் சென்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.
இந்த விவரம் தெரியாமல் தந்தை, பாட்டியைக் காப்பாற்ற சென்ற குணசேகரனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடா்ந்து அப்பகுதிக்குச் சென்று மின் விநியோகத்தை நிறுத்தி, பின்னா் சடலங்கள் மீட்கப்பட்டதாக மின்வாரிய அலுவலா்கள் தெரிவித்தனா்.