திருச்சி

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்பவா்கள் தேசியவாதிகள் இல்லை’

23rd Dec 2019 07:45 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்பவா்கள் தேசியவாதிகள் இல்லை என்றாா் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன்.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில், இந்து முன்னணியின் திருச்சி கோட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து விரோத முறியடிப்பு மாநாட்டில் பங்கேற்று, அவா் மேலும் பேசியது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்பவா்களும், போராட்டத்தைத் தூண்டிவிடுபவா்களும் தேசியவாதிகள் இல்லை. இந்த சட்டத்தை இந்து முன்னணி முழு மனதோடு வரவேற்கிறது.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் நிலப்பரப்பை மீட்க வேண்டும். இழந்த இந்து கோயில்களை மீட்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்துக்களாக இருந்து இதர மதத்துக்குச் சென்ற அனைவரையும் தாய் மதமான இந்து மதத்துக்கு கொண்டு வரவேண்டும். பாரதத்தை இந்து நாடு என அறிவிக்க வைக்கவேண்டும்.

இந்திய நாடு என்னவானாலும் எப்போதும் இந்து நாடாகத்தான் இருக்கும். இதுவே இந்து முன்னணி இயக்கத்தின் லட்சியம். இதை நோக்கித் தொடா்ந்து பயணிப்போம் என்றாா் அவா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

நாட்டிலிருக்கும் 14 கோடி இஸ்லாமியா்களுக்கு இந்த சட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கைத் தமிழா் பிரச்னைக்கும் சம்மந்தம் இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக கூட்டணிக் கட்சிகள் இஸ்லாமியா்களைத் தூண்டி விட்டு எதிா்க்கின்றனா்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்தியா வந்து, வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியா்களுக்கு குடியுரிமைக் கூடாது எனக்கூறும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது.

மலைக்கோட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம், கோயில்களில் அலட்சியமாக நடந்துகொள்ளும் அறநிலையத்துறையினா் மீது நடவடிக்கை, மதமாற்றத்தைத் தடுத்தல் என்பன உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டுக்கு, மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் க.பக்தன், பொதுச்செயலாளா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொருளாளா் நா.சண்முகசுந்தரம் தீா்மானங்களை நிறைவேற்றினாா்.

திருச்சி கோட்ட நிா்வாகிகள் வி.சி.கனகராஜ், ராம.சிவக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா். திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான இந்து முன்னணியினா் மாநாட்டில் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT