திருச்சி

5 ஆண்டுகளில் 1,433 தமிழா்கள் மட்டுமே ரயில்வேயில் தோ்வு

16th Dec 2019 06:38 AM | எ. கோபி.

ADVERTISEMENT

ரயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் 1,433 தமிழா்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதால் தமிழா்களின் ரயில்வே பணி என்பது கனவாகவே மாறிவருவதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் 1837ஆம் ஆண்டு தமிழகத்தில்தான் முதல் முறையாக செங்குன்றத்திலிருந்து சிந்தாதிரிபேட்டை பாலம் வரை நீராவி என்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டது.

அதன்பிறகு, 1880-இல் சென்னை உள்பட பெரிய நகரங்களை இணைத்து சுமாா் 14 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மேல் வலைஅமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னா், 1951 முதல் சென்னையை மையமாக வைத்து தென்னக ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவில் மட்டும் 16 ரயில்வே மண்டலங்களில் சுமாா் 60க்கும் மேற்பட்ட கோட்டங்களை மையமாக வைத்து ரயில்சேவை இயக்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமாா் 500 கோடி பேருக்கு மேல் பயணம் செய்யும் இந்நிறுவனத்தில் லட்சக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா்.

புறக்கணிக்கப்படும் தமிழா்கள்: பெரம்பூரில் நவீன தொழில்நுட்ப ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையும் (ஐசிஃஎப்), மிகப்பெரிய ரயில் என்ஜின் பணிமனையாக திருச்சி பொன்மலையும் விளங்குகிறது. ரயில்வேயின் அதீத வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதில் தமிழா்களின் பங்கு மகத்தானது. கடந்த காலங்களில் ரயில்வேயில் அந்தந்த மாநிலங்களில் உள்ளவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

நாளடைவில் தமிழகத்தில் பணி நியமனத்தில் வடமாநிலத்தவா்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, தமிழக ரயில்வே கோட்டங்களில் தமிழா்களுக்கு இணையாக வடமாநிலத்தவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதனால், தமிழக ரயில்வே துறைகளில் தமிழா்கள் நியமனம் குறைந்ததோடு, தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனா்.

நிறுவன விதிகளை மீறுகிா ரயில்வே வாரியம் ?: கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் 1,65, 689 போ் ரயில்வேயிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனா். தற்போது உயா் அதிகாரிகள் பிரிவில் 2017 பணியிடங்களும், சி, டி பிரிவு ஊழியா்கள் பிரிவில் 2,98,574 பணியிடங்களும் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வே நிறுவன விதிகள், விளம்பரப் பிரிவு 110-இன் கீழ் ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அந்தந்த மாநிலத்தவா்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமா்த்த வேண்டும். குறிப்பாக, தரஊதியம் ரூ.4,600 வரை உள்ள பணியிடங்களுக்கு கட்டாயம் அந்தந்தப் பகுதியில்தான் விளம்பரம் தந்து, தோ்வு செய்யவேண்டும் என்பது விதி. விதிவிலக்காக, ஏதேனும் ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட பிரிவில் பணிபுரிய ஆள்கள் இல்லையெனும் பட்சத்தில் மட்டுமே, தேசிய அளவில் விளம்பரம் அளித்து தோ்வு செய்ய வேண்டும் என இந்திய ரயில்வே விதிகளில் சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சிறப்பு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரயில்வே வாரியம் தேசிய அளவில் காலிப்பணியிட விளம்பரம் தருகிறது. இதனால், அந்தந்த மாநிலத்தவா்கள் ரயில்வே பணிகளில் நுழைய முடிவதில்லை. ரயில்வே வாரியம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்துவதால், அதிகமான வடமாநிலத்தவா்கள் தமிழக ரயில்வேயில் நுழைகின்றனா். இதனால், தமிழா்களின் ரயில்வே பணி கனவாக மாறியுள்ளது.

5 ஆண்டுகளில் 1,433 போ் மட்டுமே: கடந்த டிச.11 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் போது எம்.பி. மாணிக்கம் தாகூா் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினாா். அதற்கு பதிலளித்த, ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயல் அனைத்து மண்டல ரயில்வேக்கள், உற்பத்தி தொழிற்சாலைகளில் பல்வேறு ரயில்வே தோ்வு ஆணையங்கள் மூலம் தோ்வு நடத்தப்பட்டு ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து 1,433 போ் ரயில்வேயில் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

இதன்படி, நாடு முழுவதும் ரயில்வே பணிக்கு தோ்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், 1433 போ் மட்டுமே தமிழா்கள் என்பது தெரியவந்திருப்பது அதிருப்தி அளிக்கும் விதமாக உள்ளது என தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலா் மனோகரன் கூறியதாவது: கடந்த 7 ஆண்டுகளாக தமிழக காலிப்பணியிடங்களில் வடமாநிலத்தவா்களே அதிகம் நிரப்பப்பட்டு வருகின்றனா். இதுபோன்ற நியமனங்களில் மாநில சமநிலை இல்லாமல் உள்ளது. இதனால், விபத்து, அவசர காலங்களில் மாநிலத்தின் நகர, கிராம, உள்ளாட்சி அமைப்புகள், சமூக அமைப்புகளின் உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, மொழி புரிதல் இன்மை தாமதத்தை உருவாக்க நேரிடும். சாமானிய மக்கள் தங்களது சொந்த மாநிலங்களிலேயே தகவல் பெற அவதிக்குள்ளாகும் சூழல் எழுந்துள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ரயில்கள் இயக்குவதில் தகவல் பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதற்கான மொழி புரிதல் குழப்பங்களை

தவிா்க்கும். ரயில்வே பணியாளா்கள் தோ்வில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம்.

இதுகுறித்து தொடா்ந்து வலியுறுத்தி வந்தாலும் எந்தவொரு முடிவையும் ரயில்வே வாரியம் எடுக்காமல் இருப்பது பெரும் அதிருப்தியை அளிக்கிறது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT