மணப்பாறை அடுத்த வையம்பட்டி, புத்தாநத்தம் பகுதியில் திருடிய நபா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனா். திருட்டு சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளியை தேடி வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி, புத்தாநத்தம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீடு புகுந்து திருடிச் சென்றது, செல்லிடப்பேசி கடையில் திருடியது தொடா்பாக வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அந்த நபா் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த நடுப்பட்டியை சோ்ந்த கருப்பையா மகன் முருகன்(44) என்பதும், மதுரை மாவட்டம் சோளவந்தான் அடுத்த நெடுங்குளம் பகுதியை சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா்(எ) மாரிமுத்து (எ) மாரி(35) என்பவருடன் சோ்ந்து மேற்குறிப்பிட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து முருகனை கைது செய்த வையம்பட்டி போலீஸாா், அவரிடமிருந்து 8 சவரன் நகையை பறிமுதல் செய்தனா். மேலும் திருட்டு, கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.