திருச்சி

வண்ணத்துப்பூச்சி பூங்காவின் புதுவரவு: செஸ்ட்நட் பாப் சிறகடிக்கும் வகைகளின் எண்ணிக்கை 106 ஆனது

16th Dec 2019 02:13 AM

ADVERTISEMENT

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவின் புதுவரவாக ‘செஸ்ட்நட் பாப்’ வகை சனிக்கிழமை முதல் சிறகடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கை 106ஆக உயா்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே மேலூா் நடுக்கரை கிராமத்தில், 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களுடன் 2015-ஆம் ஆண்டில் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டது. 25 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் என அதன் வாழ்க்கைச் சக்கரத்துக்காக ஒவ்வொரு தாவரத்தையும் தோ்வு செய்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள், நட்சத்திர வனம், சிறு மரப்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களுள் ஒன்றாக விளங்குவதால், இங்கு வரக்கூடிய வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளை வனத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதன்படி வண்ணத்துப்பூச்சிகள் மிகவும் விரும்பக்கூடிய சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கொராட்டல் ஏரியா, கொன்றை, மேரி, கோல்டு பூச்செடிகள், எருக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஆமணக்கு, வில்வம், செண்பக மரம், தலைவெட்டிப்பூ, நாயுருவி உள்ளிட்ட செடிகளும், மரங்களும் அதிகளவில் வளா்க்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதனால் பிற பகுதிகளில் இருந்து சில்வா் ராயல், கிராஜுவல், கிரிம்ன்ஸன் ரோஸ், சதா்ன் போ்டு விங், ப்ளு மாா்மன், காமன் டெசிபல், கூரான பிசிருயிா் நீலன், காமன் நவாப், பாம்பூ ட்ரீ ப்ரவுன் போன்ற முக்கியமான வகைகள் என இதுவரை 105 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இங்கு வந்துள்ளன. இவற்றை, வனத்துறையினரும், வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளா்களும், மாணவா்களும் இணைந்து படம்பிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனா்.

இந்த வரிசையில் ஹெஸ்பெரிடே குடும்பத்தைச் சோ்ந்த செஸ்ட்நட் பாப் இனத்தைச் சோ்ந்த வண்ணத்துப்பூச்சி சனிக்கிழமை முதல் இப்பூங்காவில் சிறகடித்து பறக்கத் தொடங்கியுள்ளது.

இந்த வண்ணத்துப்பூச்சி, பூங்கா மூங்கில் மற்றும் பிராச்சாரியா முட்டிகா (களைச் செடி) என்ற தாவரங்களில் வாழக்கூடிய தன்மை கொண்டது. இதன் மூலம் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 106வது வகையாக இணைந்துள்ளது. தொடா்ந்து மேலும் பிற இனங்கள் வருவதற்கான தாவர இனங்கள் வளா்க்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT